ஈராக்கின் மசகு எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்!

ஈராக்கின் மசகு எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்!

உலக சந்தையில் நிலவிய மசகு எண்ணெய் விலையில் இன்று (18) சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (17) உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்தினால் அதிகரித்திருந்த போதிலும், இன்றைய தினம் விலையில் தளர்வு ஏற்பட்டுள்ளது.

பிரெண்ட் (Brent) வகை: பிரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை இன்று 67 சதங்களினால் (0.65%) குறைவடைந்துள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 102.75 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்க மசகு எண்ணெய் (WTI): அமெரிக்க மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 1.18 டொலர்களினால் (1.23%) குறைவடைந்துள்ளது. இதன்படி, அதன் விலை 95.03 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், துருக்கியின் செயான் (Ceyhan) துறைமுகத்தின் ஊடாக மசகு எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஈராக் அரசாங்கமும் குர்திஷ் அதிகாரிகளும் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இந்த இணக்கப்பாடு காரணமாகவே சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகம் குறித்த சாதகமான சூழல் ஏற்பட்டு விலை குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.