இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் பலி! 

இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் பலி! 

ஈரானிய உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிப் (Esmail Khatib), இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று (18) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானில் அடையாளம் காணப்பட்ட சில இலக்குகள் மீது நேற்று (17) இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களின் போதே அவர் உயிரிழந்துள்ளார்.

ஈரானிய மதகுருவும் அரசியல்வாதியுமான காதிப், 2021 ஓகஸ்ட் மாதம் முதல் ஈரானின் உளவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.

65 வயதான இவர், ஈரானின் உளவுத்துறை அமைச்சராகப் பதவியேற்ற 8-வது அதிகாரி ஆவார்.

ஈரானிய தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்திய சில மணி நேரங்களிலேயே, அமைச்சர் காதிப்பின் மரணம் குறித்த தகவலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஈரானின் புதிய அதியுயர் தலைவர் மொஜ்தபா கமேனி அல்லது ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்தத் தேடப்படும் நபர்களின் பட்டியலில் எஸ்மாயில் காதிப்பின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் இந்த மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள போதிலும், ஈரான் அரசாங்கம் இது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.