ஸ்வீடன் பிரஜைக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

ஸ்வீடன் பிரஜைக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஸ்வீடன் பிரஜை ஒருவருக்கு இன்று (18) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஸ்வீடன் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த விபரங்களை ஸ்வீடன் வெளிவிவகார அமைச்சு பகிரங்கப்படுத்தவில்லை.

குறித்த ஸ்வீடன் பிரஜை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அவரது நிலைமை குறித்து ஸ்வீடன் அதிகாரிகள் ஈரானிய அரசாங்கத்திடம் தொடர்ச்சியாகக் கேள்வியெழுப்பி வந்தனர்.

இந்த மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு ஸ்வீடன் வெளிவிவகார அமைச்சர் மரியா மால்மர் ஸ்டெனெர்கார்ட் (Maria Malmer Stenergard) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். "மரண தண்டனை என்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான மற்றும் மாற்றியமைக்க முடியாத ஒரு தண்டனையாகும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதை ஸ்வீடன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், குறித்த ஸ்வீடன் பிரஜைக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தீர்மானமானது, முறையான சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக எடுக்கப்பட்ட ஒன்று என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.