ஈரானின் தென் பார்ஸ் (South Pars) எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாரிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ஈரானின் தென் பார்ஸ் வலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அங்கு பயங்கர தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கட்டார் மீது தாக்குதல்: ஈரானினால் கட்டாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) கைத்தொழில் நகரை இலக்கு வைத்து 5 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில் 4 ஏவுகணைகள் முறியடிக்கப்பட்ட போதிலும், ஒரு ஏவுகணை வீழ்ந்து வெடித்ததில் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமொன்று சேதமடைந்துள்ளது.
சவூதி அரேபியா: ரியாத் நகரை இலக்கு வைத்து ஏவப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணையைச் சவூதி பாதுகாப்புப் படைகள் முறியடித்தன. எனினும், அதன் சிதறல்கள் வீழ்ந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம்: அபுதாபி நகர் மற்றும் அமீரக விமானப்படைத் தளம் ஒன்றின் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ள போதிலும், அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல்: ஈரானின் தாக்குதல்களால் டெல் அவிவ் (Tel Aviv) விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 விமானங்கள் சேதமடைந்துள்ளன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் முதல் முறையாக வட ஈரானை இலக்கு வைத்துத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
ஈரானின் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள கட்டார், இது தனது தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன், கட்டாரில் தங்கியுள்ள ஈரானிய இராணுவத்தினர் மற்றும் தூதரக அதிகாரிகள் அனைவரையும் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கட்டார் வெளிவிவகார அமைச்சு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, சிவில் உட்கட்டமைப்புகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனப் பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கட்டார் அமீருடன் அவசரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.