ஈரான் ஆட்சி இன்னும் வீழ்ச்சியடையவில்லை, ஆனால் பலவீனமடைந்துள்ளது: அமெரிக்க உளவுத்துறை பிரதானி சாட்சியம்!

ஈரான் ஆட்சி இன்னும் வீழ்ச்சியடையவில்லை, ஆனால் பலவீனமடைந்துள்ளது: அமெரிக்க உளவுத்துறை பிரதானி சாட்சியம்!

ஈரானிய ஆட்சிமுறை இன்னும் சிதையாமல் (Intact) காணப்பட்ட போதிலும், அது பாரியளவில் பலவீனமடைந்துள்ளதாக (Degraded) அமெரிக்காவின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி நேற்று (18) புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தேசிய உளவுத்துறை பணிப்பாளர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஏனைய உயர்மட்ட அதிகாரிகள், அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்து இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகக் கொங்கிரஸ் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

கடந்த பெப்ரவரி இறுதியில் போர் ஆரம்பமானதன் பின்னர் உளவுத்துறை குறித்து பகிரங்கமாக நடத்தப்பட்ட முதலாவது விளக்கமளிப்பு இதுவாகும். ஈரான் அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் (Imminent Threat) விடுக்கவில்லை எனக் கூறி, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் பதவி விலகிய மறுதினமே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் உளவுத்துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் துளசி கப்பார்ட், மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சிக்கல்கள் ஏற்படும் என்பதை அமெரிக்கா முன்னரே எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

"ஈரானியத் தலைமைத்துவம் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக அத்தேசத்தின் பலம் குறைந்துள்ளது. இருப்பினும், ஈரானிய ஆட்சிமுறை இன்னும் வீழ்ச்சியடையாமல் நிலையாக இருப்பதாகவே உளவுத்துறை (IC) மதிப்பிடுகிறது" என அவர் தெரிவித்தார்.

CIA, FBI, தேசிய பாதுகாப்பு முகமை (NSA) மற்றும் பாதுகாப்பு உளவுத்துறை முகமை (DIA) ஆகியவற்றின் தலைவர்களுடன் முன்னிலை வரிசையில் அமர்ந்திருந்த கப்பார்ட்டிடம், ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோன் ஒசாஃப் (Jon Ossoff), "ஈரான் ஒரு உடனடி அச்சுறுத்தல் என நீங்கள் கருதுகிறீர்களா?" எனத் தொடர்ச்சியாகக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்த கப்பார்ட், "எது உடனடி அச்சுறுத்தல் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உண்டு" எனப் பதிலளித்தார்.

யுத்தம் ஆரம்பமானது முதல், அமெரிக்கா ஏன் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது என்றும், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் அறிந்திருந்ததா என்றும் இரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடிய அணு ஆயுதங்களை ஈரான் தயாரித்து வந்ததாலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோ கென்ட் (Joe Kent), ஈரான் அமெரிக்காவிற்கு "எந்தவொரு உடனடி அச்சுறுத்தலையும்" விடுக்கவில்லை எனக் கூறி நேற்று தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அத்துடன் இப்போர் குறித்து ட்ரம்ப் மீது அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். எனினும், CIA பணிப்பாளர் ஜோன் ரட்க்ளிஃப் (John Ratcliffe), கென்டின் கருத்தை ஏற்க மறுத்ததுடன், ஈரான் நீண்டகாலமாக அமெரிக்காவிற்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஈரானின் இராணுவ பலம் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதாகக் கப்பார்ட் தெரிவித்தார்.

2025 ஜூன் மாதம் ஈரானின் அணு බෝම්பு தயாரிக்கும் திறனை அழிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட '12 நாள் போரில்' (12-Day War) ஏற்பட்ட பாரிய சேதங்களிலிருந்து மீள ஈரான் முயன்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இத்தாக்குதல்கள் மூலம் ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டதாகத் தனது எழுத்து மூல அறிக்கையில் குறிப்பிட்டிருந்த கப்பார்ட், அதனைச் சபையில் வாய்மொழியாக வாசிக்கவில்லை.

இதனை செனட்டர் மார்க் வார்னர் சுட்டிக்காட்டியபோது, காலப்பற்றாக்குறை காரணமாகவே அதனைத் தவிர்த்ததாக அவர் பதிலளித்தார்.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தக்கூடும் என்ற நீண்டகால மதிப்பீட்டை உளவுத்துறை கொண்டிருந்ததாகவும், அதன் விளைவாக அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் (Pentagon) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்ததாகவும் அதிகாரிகள் இதன்போது உறுதிப்படுத்தினர்.