மத்திய கிழக்கு பதற்றம்: பிராந்தியத்தை உலுக்கும் 9 முக்கிய நிலவரங்கள்!

மத்திய கிழக்கு பதற்றம்: பிராந்தியத்தை உலுக்கும் 9 முக்கிய நிலவரங்கள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் சடுதியாக தீவிரமடைந்துள்ள நிலையில், பல நாடுகளில் உயிர்ச்சேதங்கள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளன.

இது குறித்த 9 முக்கிய விடயங்கள் வருமாறு:

1. கட்டார் எரிவாயு மையத்திற்குப் பாரிய சேதம்

உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) முனையத்தைக் கொண்டுள்ள ராஸ் லஃபான் (Ras Laffan) தொழிற்பேட்டை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால் அங்கு "பாரிய சேதங்கள்" ஏற்பட்டுள்ளதாக கட்டார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. வளைகுடா எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் எச்சரிக்கை

ஈரானின் 'தென் பார்ஸ்' (South Pars) எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்குவோம் என ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது. அதன் ஒரு பகுதியாகவே ராஸ் லஃபான் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

3. உலகின் மிகப்பெரிய எரிவாயு வயல் மோதலின் மையப்புள்ளியில்

ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலின் ஒரு பகுதியான ஈரானின் 'தென் பார்ஸ்' பகுதி இஸ்ரேலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

4. வளைகுடா நாடுகள் எங்கும் பரவும் தாக்குதல்கள்

டுபாய், கட்டார், குவைத், ஈராக், பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் ட்ரோன் ஊடுருவல்கள் பதிவாகியுள்ளன. இது போர் பிராந்தியம் முழுவதும் விரிவடைந்துள்ளதைக் காட்டுகிறது.

5. லெபனான் மீது இஸ்ரேலின் தொடர் தாக்குதல்

ஹெஸ்பொல்லா அமைப்பினருக்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாக, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

6. ஈரான் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டமை உறுதி

நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிப் (Esmail Khatib) கொல்லப்பட்டதை அந்நாட்டு ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

7. ஈரான் விடுத்துள்ள பழிவாங்கல் எச்சரிக்கை

ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் தகுந்த "விலையை" செலுத்த நேரிடும் என ஈரானின் அதியுயர் தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.

8. எரிசக்தி கட்டமைப்புகளுக்கு IRGC அச்சுறுத்தல்

பழிவாங்கும் நடவடிக்கையாகக் கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களை இலக்கு வைப்போம் என ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஏற்கனவே அச்சுறுத்தியிருந்தது.

9. மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு

முக்கிய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களால் விநியோகத் தடை ஏற்படும் என்ற அச்சத்தில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 109 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது.