ஈரான் மீண்டும் தாக்கினால் எரிவாயு நிலையங்கள் முழுமையாக அழிக்கப்படும்; டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரான் மீண்டும் தாக்கினால் எரிவாயு நிலையங்கள் முழுமையாக அழிக்கப்படும்; டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரானின் பிரதான இயற்கை எரிவாயு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு முன்னரே தெரிந்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீண்டும் கட்டார் மீது தாக்குதல் நடத்தினால் அந்த எரிவாயு வயல் முழுவதையும் அமெரிக்கா குண்டுவீசி அழிக்கும் என எச்சரித்துள்ளார்.

தென் பார்ஸ் (South Pars) எரிவாயு வயல் மீதான தாக்குதலில் இருந்து அமெரிக்காவை விடுவித்துக் கொண்ட ட்ரம்ப், எனினும் கட்டார் மீதான ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

"இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு எதுவும் தெரியாது. இதில் கட்டார் நாட்டிற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, அத்துடன் இத்தாக்குதல் நடக்கப்போவது குறித்து அந்த நாட்டிற்குத் தெரிந்திருக்கவும் இல்லை" என ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் இந்த எரிவாயு வயலின் ஒரு சிறிய பகுதியை மாத்திரமே தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், "ஈரான் மீண்டும் அப்பாவி கட்டார் மீது தாக்குதல் நடத்தத் தீர்மானித்தால், இஸ்ரேலின் உதவியுடனோ அல்லது இல்லாமலோ, ஈரான் இதுவரை கண்டிராத பலத்துடன் தென் பார்ஸ் எரிவாயு வயல் முழுவதையும் அமெரிக்கா தரைமட்டமாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது மின்சார உற்பத்தி மற்றும் வெப்பமூட்டல் தேவைகளுக்காக இயற்கை எரிவாயுவிலேயே பெரிதும் தங்கியுள்ளது. குறிப்பாக, ஈரானின் ஒட்டுமொத்த எரிவாயு தேவையில் 80 சதவீதத்தை இந்த தென் பார்ஸ் எரிவாயு வயலே பூர்த்தி செய்கிறது.

எனவே, ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஈரான் பாரிய எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.

பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான போரை ஆரம்பித்த போதிலும், இந்த குறிப்பிட்ட தாக்குதல் விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதையே ட்ரம்பின் இந்த அறிக்கை காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.