ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்க கப்பல் கட்டணம்; ஈரான் அதிரடித் திட்டம் - வளைகுடா நாடுகள் கடும் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்க கப்பல் கட்டணம்; ஈரான் அதிரடித் திட்டம் - வளைகுடா நாடுகள் கடும் எச்சரிக்கை!

ஈரானுக்குச் சொந்தமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களுக்குப் போக்குவரத்து கட்டணம் (Transit Fees) மற்றும் வரிகளை அறவிடுவது குறித்து ஈரான் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வியாழக்கிழமை (19) தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழிப்பாதையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஈரான் முயன்று வருகிறது.

இந்த நீரிணையைப் பாதுகாப்பான பாதையாகப் பயன்படுத்தும் நாடுகள், எரிசக்தி மற்றும் உணவு விநியோகத்திற்காக ஈரானுக்குக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் சோமையே ரஃபீ (Somayeh Rafiei) தெரிவித்தார். இதனை ஈரானால் வழங்கப்படும் பாதுகாப்பிற்கான ஈடுப்பணமாக அவர் வர்ணித்துள்ளார்.

யுத்தத்திற்குப் பின்னர் ஹோர்முஸ் நீரிணையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், தடைகளுக்கு உட்பட்ட ஒரு நாடாக இருந்து பிராந்தியத்தில் ஒரு பலசாலி நாடாக ஈரான் உருவெடுக்கும் என ஈரானிய மூத்த அதிகாரி முகமது மொக்பர் (Mohammad Mokhber) தெரிவித்துள்ளார்.

"இந்த மூலோபாய நிலையைப் பயன்படுத்தி நாம் ஏனைய நாடுகள் மீது தடைகளை விதிக்க முடியும். அத்துடன் அவர்களின் கப்பல்களை இந்த நீரிணை ஊடாகப் பயணிக்க விடாமல் தடுக்கவும் முடியும்" என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

ஈரானின் இந்த நகர்வுகள் வளைகுடா அரபு நாடுகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் (Prince Faisal bin Farhan), ஈரானின் இந்த அழுத்தம் அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அவர்களுக்கு எதிராகவே அமையும் எனத் தெரிவித்தார்.

மேலும், தேவைப்பட்டால் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ரியாத் (Riyadh) தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த வாரம் இஸ்ரேல் ஈரானின் 'தென் பார்ஸ்' (South Pars) எரிவாயு வயல் மீது நடத்திய தாக்குதலும், அதற்குப் பதிலடியாக ஈரான் கட்டார் மற்றும் சவூதி அரேபியாவின் எரிசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களுமே இந்தப் புதிய நெருக்கடிக்குக் காரணமாக அமைந்துள்ளன.