இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்றைய தினம் சிங்கப்பூரிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பாரிய இதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சுமார் 9 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்தச் சத்திர சிகிச்சையை அடுத்து, அவர் அந்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்திர சிகிச்சைக்குப் பின்னர் ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாகச் சிங்கப்பூரிலுள்ள அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இலங்கையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் தங்கியிருந்து பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்த அவர், நிபுணத்துவ வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் இந்த வார ஆரம்பத்தில் சிங்கப்பூர் நோக்கிப் பயணித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்காக இலங்கையிலுள்ள அவரது அரசியல் ஆதரவாளர்களும் சர்வதேச இராஜதந்திரிகளும் மிகுந்த அவதானத்துடன் உள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததுடன், அவர் தற்போது தேறிவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இன்னும் சில தினங்களுக்கு வைத்தியர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவின் 77ஆவது பிறந்ததினம் எட்டவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மத வழிபாடுகளை முன்னெடுத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு வஜிர அபேவர்தன தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் சத்திரசிகிச்சை குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து வினவிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அவர் இந்த அறிக்கையூடாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.