தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட தூதுவரும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது அமெரிக்கா மற்றும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பாக இலங்கையின் தெளிவான நிலைப்பாடு குறித்தும், இந்தப் போரினால் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் சமூக சவால்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கமளித்தார்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, விசேட தூதுவர் செர்ஜியோ கோர் இன்று முதல் மார்ச் 24ஆம் திகதி வரை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.
அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கெய்லர் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், ஒரு மாத இடைவெளியில் இந்த உயர்மட்ட விஜயம் இடம்பெறுகிறது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
அத்தியாவசிய கடல் வழிப்பாதைகளைப் பாதுகாத்தல், துறைமுகங்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பரஸ்பர வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை இந்த விஜயம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் கொண்டுள்ள நீண்டகால பங்காளித்துவத்தை அமெரிக்கா மதிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.