மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிசக்தி விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், மின்சாரத்திற்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஆணையம் (European Commission) யோசனை முன்வைத்துள்ளது.
"சில சந்தர்ப்பங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு 15 மடங்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இது அவ்வாறு இருக்க முடியாது. மின்சார வரி வீதங்களைக் குறைப்பதற்கும், புதைபடிவ எரிபொருட்களை விட (Fossil Fuels) மின்சாரத்திற்கு குறைந்த வரி விதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் நான் முன்மொழிகிறேன்" என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விடுபட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை நோக்கி நகர்வதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்குமாறும் அவர் ஐரோப்பிய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுடனான மோதல் ஆரம்பமாவதற்கு முன்னர் இருந்த மட்டத்தை விட, தற்போது ஐரோப்பாவில் எரிவாயுவின் விலை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத் தடைகள் ஐரோப்பிய நாடுகளின் தொழிற்துறையை முடக்கக் கூடும் என்ற அச்சத்திலேயே இந்த வரி குறைப்பு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.