டிக்டொக் (TikTok), யூடியூப் (YouTube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகிய தளங்களில் பிரபலமான உள்ளடக்க உருவாக்குநர்களை (Creators) பேஸ்புக் (Facebook) நோக்கி ஈர்க்கும் நோக்கில் 'கிரியேட்டர் பாஸ்ட் ட்ராக்' (Creator Fast Track) எனும் புதிய திட்டத்தை மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்கு மூன்று மாதங்களுக்கு நிலையான கொடுப்பனவுகள், ரீல்ஸ் (Reels) காணொளிகளுக்கான கூடுதல் பார்வையாளர்கள் மற்றும் இலகுவான வருமானமீட்டும் (Monetization) வசதிகள் வழங்கப்படவுள்ளன.
கொடுப்பனவு விபரங்கள்:
100,000 க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் (Followers): இன்ஸ்டாகிராம், டிக்டொக் அல்லது யூடியூப் தளங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட கலைஞர்களுக்கு மாதம் 1,000 அமெரிக்க டொலர் வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்.
1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள்: ஏதேனும் ஒரு தளத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட பெரிய அளவிலான கலைஞர்களுக்கு மாதம் 3,000 அமெரிக்க டொலர் வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்.
புதிய வருமானமீட்டும் அளவீடுகள்:
இந்தத் திட்டத்துடன் இணைந்து, பேஸ்புக் தனது வருமானமீட்டும் முறையிலும் (Monetization Metrics) மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி பின்வரும் புதிய அளவீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
தகுதியுள்ள பார்வை (Qualified View): எந்தெந்த பார்வைகளுக்கு பணம் வழங்கப்படும் என்பதை இது விளக்கும்.
வருமான விகிதம் (Earnings Rate): ஒவ்வொரு 1,000 பார்வைகளுக்கும் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை இது காட்டும்.
தகுதியற்ற பார்வைகள் (Non-Qualified Views): சில பார்வைகளுக்கு ஏன் பணம் வழங்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை இது விளக்கும்.
வளர்ந்து வரும் படைப்பாளி பொருளாதாரம்:
மெட்டா நிறுவனத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் பேஸ்புக் தனது உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு சுமார் 3 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 35 சதவீத வளர்ச்சியாகும். இதில் 60 சதவீத வருமானம் 'ரீல்ஸ்' (Reels) காணொளிகள் மூலமே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிக்டொக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களுடன் நேரடியாகப் போட்டியிடவும், பேஸ்புக் தளத்தில் புதிய படைப்பாளர்களைக் கொண்டு வரவும் மெட்டா இந்த அதிரடி முதலீட்டை மேற்கொண்டுள்ளது.