பிரித்தானிய உள்துறைச் செயலாளர் (Home Secretary) ஷபானா மஹ்மூத் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கடுமையான குடிவரவுச் சட்டங்கள், ஆளும் தொழிற் கட்சியின் (Labour Party) கொள்கைகளுக்கும் பிரித்தானியாவின் அடிப்படை விழுமியங்களுக்கும் எதிரானது என அக்கட்சியின் முன்னாள் பிரதித் தலைவி அஞ்சலா ரெய்னர் (Angela Rayner) பகிரங்கமாக விவரித்துள்ளார்.
அஞ்சலா ரெய்னரின் இந்த விமர்சனம் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) விடுக்கப்பட்ட நேரடி சவாலாகவே அரசியல் காலங்களில் பார்க்கப்படுகிறது. இது சில வாரங்களாகத் தணிந்திருந்த தொழிற் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடியை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட அனுமதி (PR) பெறுவதற்குத் தற்போதுள்ள 5 வருட காலப்பகுதியை 10 வருடங்களாக அதிகரிக்க ஷபானா மஹ்மூத் முன்மொழிந்துள்ளார்.
அரசியல் தஞ்சம் கோருவோர் சில வருடங்களுக்குப் பிறகு நிரந்தர வதிவிடத்தைப் பெறும் உரிமையை ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபுக்கள் சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த புதிய சட்டங்களுக்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இந்த எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாத பிரதமர் ஸ்டார்மர் மற்றும் ஷபானா மஹ்மூத், தற்போது அஞ்சலா ரெய்னரின் விமர்சனத்தை அடுத்து சற்றே மென்போக்கைக் கையாளத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து பொதுமக்களிடமிருந்து சுமார் 2 இலட்சம் கருத்துக்கள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது. இது ஷபானா மஹ்மூத்தின் ஆரம்பகாலக் கடுமையான நிலைப்பாட்டில் ஏற்பட்ட ஒரு 'யூ-டர்ன்' (U-turn) ஆகக் கருதப்படுகிறது.
ஆங்கிலிக்கன் ஆயர்கள், ரபிக்கள் (Rabbis) மற்றும் இமாம்கள் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் 'தி கார்டியன்' (The Guardian) பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி, அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடி சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அவர்கள் உள்துறைச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விந்தை என்னவென்றால், கடுமையான குடிவரவு எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மற்றும் தீவிர வலதுசாரி 'ரிபார்ம் யூகே' (Reform UK) கட்சியின் பேச்சாளர் சியா யூசுப் ஆகிய இருவருமே குடிவரவாளர்களின் பிள்ளைகள் ஆவர். ஷபானாவின் பெற்றோர் பாகிஸ்தானியர்கள், சியா யூசுப்பின் பெற்றோர் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்குக் குடிவரவாளர்களின் பங்களிப்பு மகத்தானது. எனினும், நைஜல் ஃபராஜ் (Nigel Farage) போன்ற இனவாதத் தலைவர்களின் பிரசாரங்களால் பல இலங்கையர்கள் கூட கடந்த காலங்களில் 'பிரெக்சிட்' (Brexit) போன்ற தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்தமை ஒரு கசப்பான உண்மையாகும்.