அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவம் பொறித்த விசேட நினைவுத் தங்க நாணயத்தை வெளியிடுவதற்கு அந்நாட்டின் மத்திய கலைக் குழு (Federal Arts Commission) அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த 24 கரட் தங்க நாணயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் தனது இரு கைகளையும் மேசை மீது ஊன்றி வைத்துள்ளவாறான உருவம் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.
உயிருடன் இருக்கும் ஜனாதிபதி ஒருவரின் உருவத்தை அமெரிக்க நாணயங்களில் பயன்படுத்துவது மத்திய சட்டத்தின்படி (Federal Law) தடைசெய்யப்பட்ட போதிலும், திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெஸன்ட் (Scott Bessent) தனக்குரிய விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த நாணயத்தை அதிகபட்சமாக 3 அங்குல விட்டம் கொண்டதாக தயாரிக்குமாறு கலைக் குழுவின் உப தலைவர் ஜேம்ஸ் மெக்ரேரி (James McCrery) பரிந்துரைத்துள்ளார்.
நியூயோர்க்கின் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் ரிச்சி டோரஸ் (Ritchie Torres), ஜனாதிபதிகள் தமது உருவத்தை நாணயங்களில் பயன்படுத்துவதைத் தடுக்க "ட்ரம்ப் சட்டம்" (Trump Act) எனும் பெயரில் ஒரு மசோதாவை முன்வைத்த போதிலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அமெரிக்க வரலாற்றில் உயிருடன் இருக்கும் போதே நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் (Calvin Coolidge) மாத்திரமேயாவார். தற்போது அந்தப் பட்டியலில் டொனால்ட் ட்ரம்ப்பும் இணைந்துள்ளார்.