வடகொரிய அதிபர் கிம் ஜொங்-உன் (Kim Jong-un) தனது இளம் வயது மகளுடன் இணைந்து இராணுவப் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அந்நாட்டு அரச ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இதில் அவரது மகள் யுத்த தாங்கி (Tank) ஒன்றினைச் செலுத்துவதைக் காணமுடிகிறது.
இந்தச் சம்பவமானது, கிம் ஜொங்-உன்னின் அடுத்த அரசியல் வாரிசாக அவரது மகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றார் என்ற ஊகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
கிம் ஜு-ஏ (Kim Ju-ae) என அழைக்கப்படும் அந்தச் சிறுமி, ஒலிவ் பச்சை நிறத்திலான யுத்த டැங்கியின் மேற்பகுதியால் (Hatch) தலையை வெளியே நீட்டியவாறு அதனைச் செலுத்துவதும், அவருக்கு அருகில் கிம் ஜொங்-உன் புன்னகையுடன் இருப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தென்கொரிய பாதுகாப்பு நிபுணர் லீ இல்லூ (Lee Illwoo), "அவர் சமதரை ஒன்றில் மிகக் குறைந்த வேகத்திலேயே தாங்கியை ஓட்டியுள்ளார். நவீன டැங்கிகளை இயக்குவது எளிதானது என்பதால் இது ஒரு சாதாரண விடயமே" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஏவுகணை சோதனைகள், இராணுவ அணிவகுப்புகள் மற்றும் தொழிற்சாலைத் திறப்பு விழாக்கள் எனப் பாரிய இராணுவ நிகழ்வுகளில் கிம் ஜொங்-உன்னுடன் அவரது மகள் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு வருகின்றார்.
வடகொரிய அரச ஊடகங்கள் இதுவரை இச்சிறுமியின் பெயரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. அவரை "கௌரவத்திற்குரிய" அல்லது "மிகவும் அன்பிற்குரிய" குழந்தை என்றே அழைத்து வருகின்றன.
ஆரம்பத்தில் வடகொரியாவின் கடுமையான பழமைவாத கலாசாரம் மற்றும் ஆண்களே தலைமை தாங்கும் வரலாறு காரணமாக, ஒரு பெண் தலைவராக வரமுடியாது எனத் தென்கொரிய அதிகாரிகள் கருதினர். இருப்பினும், தற்போது இச்சிறுமிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் காரணமாக அந்த நிலைப்பாடு மாறி வருகின்றது.
