இனப்பாகுபாட்டிற்கு எதிரான சர்வதேச விதிகளை மீறிய குற்றச்சாட்டில், இஸ்ரேல் கால்பந்து சம்மேளனத்திற்கு (IFA) 150,000 சுவிஸ் பிராங்குகளை (சுமார் 190,700 அமெரிக்க டொலர்கள்) அபராதமாக விதிக்க சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) தீர்மானித்துள்ளது.
இஸ்ரேலின் 'பீட்டர் ஜெருசலம்' (Beitar Jerusalem) கால்பந்து கழகத்தின் ஆதரவாளர்களிடையே நிலவும் தொடர்ச்சியான இனவாத நடத்தைகளைக் கட்டுப்படுத்தத் தவறியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'பீட்டர் ஜெருசலம்' கழகத்தின் ரசிகர்கள் அராபிய வீரர்களை இலக்கு வைத்து "பயங்கரவாதிகள்" என முழக்கமிடுவதையும், "எப்போதும் தூய்மையானது" (Forever Pure) போன்ற இனவாத வாசகங்களைப் பயன்படுத்துவதையும் FIFA வின் ஒழுக்காற்றுக் குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இத்தகைய இனவாதப் போக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் கால்பந்து சம்மேளனம் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அவற்றை மறைமுகமாக அனுமதிப்பதாகவும் FIFA குற்றம் சாட்டியுள்ளது.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீன கால்பந்து சங்கம் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது. எனினும், இஸ்ரேலை சர்வதேச போட்டிகளிலிருந்து இடைநிறுத்த வேண்டும் என்ற பாலஸ்தீனத்தின் கோரிக்கையை FIFA நிராகரித்துள்ளது.
இஸ்ரேல் சம்மேளனம் தனது அடுத்த மூன்று சர்வதேசப் போட்டிகளின் போது, மைதானத்தில் "கால்பந்து உலகை இணைக்கிறது - பாகுபாட்டிற்கு இடமில்லை" (Football Unites the World -- No to Discrimination) என்ற பதாகையைத் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும்.
விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை (1/3), இனவாதத்தைத் தடுப்பதற்கான கல்வி மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களுக்காக இஸ்ரேல் சம்மேளனம் செலவிட வேண்டும்.
பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை (West Bank) பகுதிகளில் இயங்கும் இஸ்ரேலிய கால்பந்து கழகங்களுக்குத் தடை விதிக்க FIFA மறுத்துவிட்டது. இப்பகுதியின் சட்ட அந்தஸ்து சர்வதேச சட்டத்தின் கீழ் இன்னும் சிக்கலான ஒன்றாக இருப்பதால், அது குறித்து தம்மால் இப்போதைக்குத் தீர்மானிக்க முடியாது என FIFA தெரிவித்துள்ளது.