குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்!

குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்!

வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது ஈரான் தொடுத்துள்ள பாரிய தாக்குதலின் ஒரு கட்டமாக, குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, ஈரானின் தலைநகர் தஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுவருவதுடன், அங்கு பெர்சிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் சீர்குலைந்துள்ளன.

நாளொன்றுக்கு 730,000 பேரல் எண்ணெயைச் சுத்திகரிக்கும் 'மினா அல்-அஹ்மதி' (Mina al-Ahmadi) நிலையத்தின் பல பிரிவுகளில் தீ பரவியுள்ளது. ரமழான் பெருநாளைக் கொண்டாடும் வேளையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனினும் பல அலகுகள் மூடப்பட்டுள்ளன.

ஈரானின் மிகப்பெரிய எரிவாயு வயலான 'சவுத் பார்ஸ்' (South Pars) மீது இஸ்ரேல் அண்மையில் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே ஈரான் இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல்-தாப்ரா (al-Dhafra) அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் இஸ்ரேலுக்குள்ளும் பல இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) முனையமான 'ராஸ் லப்பான்' (Ras Laffan) கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதனால் உலகளாவிய LNG விநியோகத்தில் 17% பாதிப்படைந்துள்ளதுடன், இதனைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் ஐந்தில் ஒரு பங்கு (1/5) கடந்து செல்லும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளது. இதனால் எரிசக்தி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதுடன், கணினி சிப்கள் முதல் உரம் வரையிலான பொருட்களின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய விவகாரத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி எச்சரிக்கையில், "இது ஈரானின் ஆற்றலில் ஒரு சிறிய பகுதி மாத்திரமே" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் பேச்சாளர் அலி முகமது நயினி இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதை ஈரான் அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.