அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் அலி முகமது நயினி (Ali Mohammad Naini) கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் 'தஸ்நிம்' (Tasnim) செய்திச் சேவை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024 ஆம் ஆண்டு முதல் IRGC இன் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றி வந்த நயினி, இத்தாக்குதலில் "வீரமரணம்" (Martyred) அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்லப்படுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே, ஈரானின் ஏவுகணை உற்பத்தித் திறன் முடக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட கருத்தை நயினி கடுமையாக மறுத்திருந்தார்.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான கருத்துக்கள் எவையும் வெளியிடப்படவில்லை என 'தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்' (The Times of Israel) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டு நடவடிக்கையாகக் கருதப்படும் இந்த வான்வழித் தாக்குதல், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த உயர்மட்டப் படுகொலையானது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை மேலும் உக்கிரமடையச் செய்யும் என அஞ்சப்படுகிறது.