இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிப் பகுதியில் சுமார் 2,764 பேர் காணாமல் போயுள்ளனர், எனினும் அந்த எண்ணிக்கை விவாதத்திற்குரியது என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
காணாமல் போன நபர்கள் தொடர்பாக இதுவரை முறையான அல்லது துல்லியமான தரவுத்தளம் (Database) எதுவும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"யுத்த காலப்பகுதியில் இரு தரப்பினருமே நபர்களைக் கட்டாயமாகக் காணாமல் ஆக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் இத்தகைய செயல்களை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை" என அவர் தெரிவித்தார்.
காணாமல் போனோர் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்கு எவ்வித சர்வதேச பொறிமுறைகளையும் (International Mechanisms) அரசாங்கம் ஏற்கப்போவதில்லை எனவும், அதற்குத் தனது எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.