உலகெங்கிலும் உள்ள சுற்றுலாத் தலங்கள் எதிரிகளுக்கு 'பாதுகாப்பானவை அல்ல' - ஈரான் எச்சரிக்கை!

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாத் தலங்கள் எதிரிகளுக்கு 'பாதுகாப்பானவை அல்ல' - ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் எதிரிகளுக்கு உலகெங்கிலும் உள்ள பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் போன்ற பொது இடங்கள் இனி பாதுகாப்பானதாக இருக்காது என ஈரான் எச்சரித்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (Associated Press - AP) செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கும் அதன் எதிரி நாடுகளுக்கும் இடையே நிலவும் போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானிய இராணுவப் பேச்சாளர் ஜெனரல் அபுல்ஃபசல் ஷெகர்ச்சி (Abolfazl Shekarchi) கருத்துத் தெரிவிக்கையில், "ஈரானுக்கு விரோதமானவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் பாதுகாப்பானதாக இருக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தனது எதிரிகளாகக் கருதும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை அவர்கள் தனிப்பட்ட ரீதியில் சுற்றுலாச் செல்லும் இடங்களிலும், போர் வலயங்களுக்கு வெளியேயும் உலகளாவிய ரீதியில் வேட்டையாடப் போவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த எச்சரிக்கையானது மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அப்பாலும் சாத்தியமான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.