புதுடெல்லியில் இருந்து வன்கூவர் நோக்கிப் பயணித்த இந்திய விமானம் நடுவானில் 'யூ-டர்ன்'!

புதுடெல்லியில் இருந்து வன்கூவர் நோக்கிப் பயணித்த இந்திய விமானம் நடுவானில் 'யூ-டர்ன்'!

புதுடெல்லியில் இருந்து கனடாவின் வன்கூவர் (Vancouver) நோக்கிப் பயணித்த எயார் இந்தியா விமானம், கனடாவிற்குள் நுழைவதற்கான சட்டப்பூர்வ அனுமதி இல்லாத காரணத்தால் நடுவானில் இருந்து மீண்டும் டெல்லிக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

AI185 எனும் இலக்கத்தைக் கொண்ட இந்த விமானம், டெல்லியில் இருந்து காலை 11:34 மணிக்குப் புறப்பட்டு சுமார் 4 மணிநேரம் பயணித்த நிலையில், சீன வான்பரப்பிற்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது இந்தப் பாரிய தவறு கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட Boeing 777-200LR ரக விமானத்திற்கு கனடாவிற்குள் நுழைய அனுமதி இல்லை. எயார் இந்தியா நிறுவனம் கனடாவிற்குச் சேவை வழங்க Boeing 777-300ER ரக விமானங்களை மாத்திரமே பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளது.

இந்தத் தவறு கண்டறியப்பட்டதும் விமானம் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டது. மொத்தம் 7 மணிநேரம் 54 நிமிடங்கள் வான்பரப்பில் பயணித்த பின்னர் விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியது.

இந்தச் சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு எயார் இந்தியா நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளதோடு, அவர்களுக்குத் தங்குமிட வசதிகளையும் மாற்று விமான வசதியையும் மறுநாள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

இந்த ஒரு தவறு காரணமாக எயார் இந்தியா நிறுவனத்திற்குப் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு Boeing 777 ரக விமானம் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 8 முதல் 9 தொன் எரிபொருளைப் பயன்படுத்துகின்ற நிலையில், சுமார் 8 மணிநேர வீண் பயணத்தினால் பெருமளவு எரிபொருள் வீணாகியுள்ளதாக NDTV சுட்டிக்காட்டியுள்ளது.