ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அங்கு தரைப்படைகளை (Ground Troops) நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக பிபிசியின் சர்வதேச ஊடகப் பங்காளியான சிபிஎஸ் (CBS) செய்தி வெளியிட்டுள்ளது.
பென்டகனின் உயர்மட்ட அதிகாரிகள் இதற்கான விரிவான திட்டமிடல்களை முன்னெடுத்து வருவதுடன், ஈரானுக்குள் அமெரிக்கப் படைகள் நுழையும் பட்சத்தில் ஈரானிய இராணுவத்தினரைத் தடுப்புக்காவலில் வைப்பது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை "குறைத்துக்கொள்வது" (Winding down) குறித்து அமெரிக்கா பரிசீலிப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். எனினும், போர்நிறுத்தம் (Ceasefire) ஒன்றிற்கு அவர் இணங்கவில்லை என்பதுடன், தரைப்படை நகர்வுகள் குறித்து எவ்வித நேரடித் தகவல்களையும் வெளியிடவில்லை.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க திறைசேரி தற்காலிகமாக நீக்கியுள்ளது.
இந்த "குறுகிய கால அனுமதியின்" மூலம் சுமார் 140 மில்லியன் பேரல் எண்ணெய் உலகச் சந்தைக்குள் நுழையவுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை ஈரான் பெற்றுக்கொள்வதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான ஈரானின் தாக்குதல்கள் காரணமாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. தற்போது பிரெண்ட் மசகு எண்ணெயின் (Brent Crude) விலை ஒரு பேரல் 112 டொலராக நிலவுகின்றது. இது கடந்த ஒரு வருடத்தில் 53 சதவீத அதிகரிப்பாகும்.