அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முழுமையாகத் திறந்துவிடத் தவறினால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை "அடியோடு ஒழித்துக்கட்டப்போவதாக" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை அச்சுறுத்தியுள்ளார். இது போரை "குறைத்துக்கொள்வது" குறித்து அவர் பேசிய ஒரு நாளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமாகும்.
"ஈரான் எவ்வித மிரட்டலுமின்றி ஹார்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் முழுமையாகத் திறக்காவிட்டால், அமெரிக்கா அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும். முதலாவதாக மிகப்பெரிய நிலையத்திலிருந்து தாக்குதல் தொடங்கும்!" என ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த இறுதி எச்சரிக்கை, ஈரானிய மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் மின்சார உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் இந்த நீரிணை மூடப்பட்டுள்ளதால், உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பாவில் எரிவாயு விலை கடந்த வாரம் 35% வரை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்கினால், பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கடல்நீரை நன்னீராக்கும் (Desalination) நிலையங்களை ஈரான் தாக்கும் என அந்நாட்டு இராணுவத் தலைமையகம் எச்சரித்துள்ளது.
ஈரான் முதல் முறையாக 4,000 கி.மீ (2,500 மைல்கள்) தூரம் சென்று தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவத் தளபதி ஐயல் ஜமீர் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரித்தானிய இராணுவத் தளமான டியேகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் இரு ஏவுகணைகளை ஏவியுள்ளது.
"இந்த ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்குவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. இவற்றின் வீச்சு பெர்லின், பாரிஸ் மற்றும் ரோம் போன்ற ஐரோப்பிய தலைநகரங்களை நேரடியாகத் தாக்கும் எல்லைக்குள் உள்ளன" என ஜமீர் எச்சரித்துள்ளார்.
இலக்கு வைக்கப்படக்கூடிய ஈரானின் மின் நிலையங்கள்:
ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அவற்றின் திறன்:
தமாவந்த் (Damavand) மின் நிலையம்: 2,868 மெகாவாட் (டஹ்ரான் அருகே உள்ளது).
கெர்மான் (Kerman) மின் நிலையம்: 1,910 மெகாவாட்.
ராமின் (Ramin) மின் நிலையம்: 1,890 மெகாவாட்.
புஷெஹ்ர் (Bushehr) அணுமின் நிலையம்: 1,000 மெகாவாட்.
யுத்தம் தொடங்கி 4 வாரங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
சனிக்கிழமை இரவு, ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் தெற்கு நகரங்களான திமோனா (Dimona) மற்றும் ஆராட் (Arad) ஆகியவற்றைத் தாக்கின. இதில் சிறுவர்கள் உட்படப் பல டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.
இஸ்ரேலின் இரகசிய அணு உலை (Nuclear Reactor) திமோனாவில் இருந்து சுமார் 13 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.