இஸ்ரேலிய அணுசக்தி மையத்தை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேலிய அணுசக்தி மையத்தை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

தமது அணுசக்தி மையத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமோனா (Dimona) நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

அணுசக்தி அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக நிதானத்துடன் செயற்படுமாறு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ள பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா நகரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஏவுகணை, இஸ்ரேலிய அணுசக்தி மையத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் விழுந்து வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தெற்கு இஸ்ரேலின் எராட் (Arad) நகர் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி

ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடத் தவறினால்,

ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் தனது பதிலை வழங்கியுள்ளது.

ஈரானிய அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி (BBC) வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரான் அரசாங்கம் பின்வருமாறு தெரிவித்துள்ளது:

தமது நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், வளைகுடா பிராந்தியம் (Gulf Region) முழுவதும் உள்ள அமெரிக்காவிற்குச் சொந்தமான எரிசக்தி உட்கட்டமைப்புகளை (Energy Infrastructure) இலக்கு வைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.