உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலைகள் பாரிய அதிகரிப்பைக் காட்டியுள்ளன.

இதில் மிகவும் அவதானிக்கத்தக்க விடயம் என்னவென்றால், அமெரிக்க அளவுகோலாகக் கருதப்படும் 'வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்' (WTI) கச்சா எண்ணெய் விலை, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் 100 அமெரிக்க டாலர் எல்லையைத் தாண்டியுள்ளது.

சிகாகோ வர்த்தக மையத்தில் (Chicago Mercantile Exchange) வர்த்தகம் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே, மே மாத விநியோகத்திற்கான WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.78 சதவீதத்தால் அதிகரித்து 100.10 டாலராகப் பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய அளவுகோலான வட கடல் 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலையும் 1.73 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் பீப்பாய் ஒன்றின் விலை 113.44 டாலராகக் காணப்பட்டது.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் மோதல்கள் காரணமாக, எரிசக்தி விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள முடக்கங்களே இந்த விலை அதிகரிப்புக்கு நேரடி காரணமாக அமைந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, முதலீட்டாளர்கள் அதிக விலைக்கு எண்ணெயைக் கொள்வனவு செய்ய முற்பட்டுள்ளனர்.

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை ஏற்ற இறக்கங்கள், வரும் நாட்களில் ஏனைய வளர்ந்து வரும் நாடுகளின் எரிபொருள் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.