கியூபாவில் தேசிய மின்சாரக் கட்டமைப்பு ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக முடங்கியதை அடுத்து, 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
"தேசிய மின்சார அமைப்பில் முழுமையான துண்டிப்பு ஏற்பட்டுள்ளது" என கியூபாவில் எரிசக்தி அமைச்சு சமூக வலைதளத்தில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும், வைத்தியசாலைகள் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்பு போன்ற "முக்கிய" மையங்களுக்கு முன்னுரிமை அளித்து மின்சாரத்தை படிப்படியாக மீட்டெடுத்து வருவதாக கியூபாவில் மின்சாரக் கட்டமைப்பு ஆபரேட்டரான UNE தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, ஹவானா (Havana) நகரின் பாதியளவு பகுதிகளுக்கு மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எரிபொருள் தடையால் (US Fuel Blockade) மின் நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் மட்டும் கியூபா மூன்று பிரதான மின்தடைகளை எதிர்கொண்டுள்ளது.
கம்யூனிச நாடான கியூபாவில் காலாவதியான மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
சர்வதேச சோசலிச அமைப்புகளின் கூட்டணி ஒன்று சூரிய சக்தித் தகடுகள் (Solar panels), உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏந்தியவாறு ஹவானாவிற்கு வருகை தந்துள்ளன. மெக்சிகோவிலிருந்து வரும் "Nuestra America" எனும் உதவிப்படகுத் தொடர் திங்கட்கிழமை ஹவானா துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நெருக்கடியால் ஆத்திரமடைந்த மக்கள் ஹவானா நகரில் பாத்திரங்களை ஒலித்துத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மொரோன் (Morón) நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்திற்குத் தீ வைத்துள்ளனர். கியூபாவில் அனுமதியற்ற போராட்டங்கள் சட்டவிரோதமானவை என்பதோடு, அதில் ஈடுபடுபவர்கள் சிறையிலிடப்படலாம்.
கடந்த ஜனவரி 3ஆம் திகதி வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க வீரர்களால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கியூபா தொடர்பிலும் இவ்வாறான திட்டங்கள் குறித்து டொனால்ட் ட்ரம்பிடம் வினவப்பட்டது.
எரிபொருள் தடையை நீக்குவதற்கு, வெனிசுலாவின் நட்பு நாடான கியூபாவில் ஜனாதிபதி மிகுவேல் டயஸ்-கனெல் (Miguel Díaz-Canel) பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என ட்ரம்ப் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் ட்ரம்ப் பேசுகையில், கியூபாவை "நட்பு ரீதியாகக் கையகப்படுத்த" (Friendly takeover) வாய்ப்புள்ளதாகவும், அது ஒரு "கௌரவம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த கியூபா ஜனாதிபதி, அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளத் தமது மக்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க இரு நாடுகளுக்கும் இடையில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அவர் உறுதிப்படுத்தினார்.
எனினும், "கியூபாவின் அரசியல் முறைமையோ அல்லது அதன் அதிகாரிகளின் பதவிகளோ அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய விடயங்கள் அல்ல" என கியூபாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.