ஈரானின் மின்சாரக் கட்டமைப்பைத் தாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியம் முழுவதும் உள்ள எரிசக்தி மற்றும் நீர் உட்கட்டமைப்புகள் (Water Infrastructure) மீது பதிலடித் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. குடிநீருக்காக கடல்நீரை நன்னீராக்கும் (Desalination) நிலையங்களையே பெரிதும் நம்பியிருக்கும் இப்பிராந்தியத்தில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
ஜனாதிபதி ட்ரம்ப் திங்கட்கிழமை இரவு வரை காலக்கெடு விதித்துள்ளார். 48 மணிநேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முழுமையாகத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
"ஈரானின் எரிசக்தி கட்டமைப்பு தாக்கப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குச் சொந்தமான தகவல் தொழில்நுட்பம் மற்றும் கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் இலக்கு வைக்கப்படும்" என ஈரான் இராணுவ ஊடகப்பேச்சாளர் இப்ராஹிம் ஸொல்பகாரி தெரிவித்தார்.
மின்சாரம் துண்டிக்கப்படுவது ஈரானை விட அதன் அண்டை நாடுகளுக்கே அதிக பாதிப்பைத் தரும். பஹ்ரைன் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் 100% குடிநீரை நன்னீராக்கும் நிலையங்கள் மூலமே பெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் 80% மற்றும் சவூதி அரேபியா 50% நீர் விநியோகத்திற்கு இந்நிலையங்களையே நம்பியுள்ளன.
மூன்று வாரங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் ஏவுகணைத் தளங்களைத் தாக்கி வந்தாலும், ஈரான் தனது பதிலடித் திறனைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. ஞாயிறு இரவு இஸ்ரேலின் டெல் அவிவ் உட்பட பல பகுதிகளில் ஏவுகணை எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டன.
4,000 கி.மீ தூரம் பாயக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் முதல்முறையாகப் பயன்படுத்தியுள்ளது. இவை இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளத்தை (Diego Garcia) இலக்கு வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
லெபனான் எல்லை: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர் தீவிரமடைந்துள்ளது. லெபனானில் இதுவரை 1,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 28 இல் போர் ஆரம்பமானது முதல் இதுவரை 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் உலகளாவிய ரீதியில் 1970-களுக்குப் பின் மிக மோசமான எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஐரோப்பிய எரிவாயு விலைகள் 35% வரை அதிகரித்தன.