ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கப் பிரஜைகள், குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ளவர்கள் "மேலதிக எச்சரிக்கையுடன்" (Increased Caution) இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரானுக்கு ஆதரவான குழுக்கள் உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்க நலன்கள் மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களை இலக்கு வைக்கக்கூடும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்குக்கு வெளியேயுள்ள அமெரிக்கத் தூதரகங்கள் ஏற்கனவே இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், வான்பரப்புகள் அவ்வப்போது மூடப்படுவதால் பயணத் தடைகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்: வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் தமக்கு அருகிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது தூதரகப் பணிமனையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள் நான்காவது வாரமாகத் தொடர்கின்றன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், ஜோர்தான், ஈராக் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பெப்ரவரி 28 அன்று ஆரம்பமான இந்தத் தாக்குதல்களில், ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட குறைந்தது 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.