இலங்கைக்கு எரிபொருள் வழங்க ஈரான் தயார்! - இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அறிவிப்பு

இலங்கைக்கு எரிபொருள் வழங்க ஈரான் தயார்! - இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அறிவிப்பு

இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால், நாட்டுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெயை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) இன்று (23) தெரிவித்துள்ளார்.

தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஒருபோதும் மூடவில்லை என்பதை அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இலங்கை நெருக்கடிக்குள்ளாவதை ஈரான் விரும்பவில்லை என்றும், ஈரான் இலங்கையை மிகவும் மரியாதைக்குரிய நாடாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ (Torpedo) தாக்குதலில் மூழ்கிய ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தமையை தூதுவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

குறித்த போர்க்கப்பல் உள்ளிட்ட மூன்று கப்பல்களும் இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிேலேயே இலங்கைக்கு வந்துகொண்டிருந்தன என அவர் விளக்கமளித்தார்.

ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் அல்லது ஏனைய வெளிநாட்டவர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க ஈரான் அரசு தயாராக உள்ளது.

வெளிநாட்டவர்களைப் பாதுகாப்பதற்காக விரிவான உட்கட்டமைப்புகள் ஈரானில் நிறுவப்பட்டுள்ளன. தற்போது அவர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

"அவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்ப விரும்பினால், துருக்கி போன்ற அண்டை நாடுகள் ஊடாக அவர்களது பயண வசதிகளைச் செய்துகொடுக்க முடியும்" என அவர் மேலும் தெரிவித்தார்.