'ஐரிஸ் டெனா' கப்பல் இலங்கையின் அழைப்பின் பேரில் வந்தது!

'ஐரிஸ் டெனா' கப்பல் இலங்கையின் அழைப்பின் பேரில் வந்தது!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 104 ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டமை குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'ஐரிஸ் டெனா' (IRIS Dena) கப்பல் இலங்கை அதிகாரிகளின் அழைப்பின் பேரிலேயே இங்கு வந்ததாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய தூதுவர், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி, போர்க்கப்பல்கள் உட்பட ஏனைய கப்பல்களுக்கு வசதிகளை வழங்கவும் உதவிகளை வழங்கவும் நடுநிலை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

"எமது தகவல்களின்படி, அவர்கள் அவசர நிலையில் இருக்கவில்லை. இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய அவர்கள் அனுமதி கோரியிருந்தனர். இந்தியாவுடன் இணைந்து அமைதியான கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இக்கப்பலும் ஏனைய இரு கப்பல்களும் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இங்கு வந்தன" என அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா இந்தத் தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை என உறுதிப்படுத்திய தூதுவர், ஐரிஸ் டெனா கப்பல் எந்தவொரு இராணுவ நோக்கத்திற்காகவும் இங்கு வரவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இக்கப்பலில் இருந்தவர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் அல்ல என்றும், அவர்கள் ஒரு இசைக்குழுவின் (Music Band) உறுப்பினர்கள் என்றும் அவர் கூறினார். இத்தாக்குதலில் 104 நிராயுதபாணி மாலுமிகள் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

"சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி, போர்க்களத்தில் மட்டுமே தாக்குதல் நடத்த அனுமதி உண்டு. ஆனால் இந்த கப்பல் போர்க்களத்திலிருந்து 1,100 கடல் மைல்களுக்கு அப்பால் இருந்ததுடன், எவ்வித தற்காப்புத் திறனையும் கொண்டிருக்கவில்லை" என அவர் சுட்டிக்காட்டினார்.

நெருக்கடி காலத்தில் இலங்கைக்கு ஈரானிடமிருந்து எண்ணெய் பெறுவதற்கான வாய்ப்பு குறித்து வினவியபோது, இலங்கை ஈரானின் ஒரு நண்பன் என்று அவர் பதிலளித்தார்.

"இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க ஈரான் எப்போதும் தயாராக உள்ளது. இலங்கை எண்ணெய் அல்லது ஏனைய பொருட்களைக் கோரினால், ஈரான் அதனை விநியோகிக்கும். இலங்கை நெருக்கடிக்குள்ளாவதை நாம் விரும்பவில்லை."

மீதமுள்ள மாலுமிகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உபசரிப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார். அத்துடன், ஈரானுக்கு எதிராகத் தளங்களைக் கொண்டுள்ள நாடுகள் மீது ஈரான் தனது தற்காப்பு நடவடிக்கைகளைத் தொடரும் என்றும் அவர் இதன்போது எச்சரித்தார்.