"காலநிலை குழப்பமானது (Climate Chaos) வானிலையின் விதிகளை மாற்றி எழுதி வருகின்றது" என உலக வானிலை தினத்தை முன்னிட்டு ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் (António Guterres) எச்சரித்துள்ளார்.
பசுமை இல்ல வாயுக்களின் அளவு சாதனை படைத்துள்ளதால், புவி வெப்பமடைதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமெடுத்துள்ளதை புதிய தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
தீவிரமடைந்து வரும் வெப்பம், நீண்டகால வறட்சி, கடல் மட்ட உயர்வு மற்றும் அடிக்கடி நிகழும் பாரிய இயற்கைச் சீற்றங்கள் குறித்து சுட்டிக்காட்டிய ஐநா பொதுச்செயலாளர், "துல்லியமான மற்றும் நம்பகமான அறிவியல் தகவல்களே எமது பாதுகாப்பிற்கான முதற்கட்ட நடவடிக்கை" என்று வலியுறுத்தினார்.
வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் (Greenhouse gases) செறிவு சர்வகால உச்சத்தை எட்டியுள்ளதாக WMO தெரிவித்துள்ளது. இது நிலப்பரப்பிலும் சமுத்திரங்களிலும் வெப்பநிலையைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்வதோடு, மனிதகுலத்திற்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான தசாப்தத்தைத் தொடர்ந்து, பூமியின் காலநிலை சமநிலையானது அவதானிக்கப்பட்ட வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீர்குலைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"2015 முதல் 2025 வரையிலான காலப்பகுதி, வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான 11 ஆண்டுகளாகக் கருதப்படுகிறது" என WMO பிரதி நிறைவேற்றுச் செயலாளர் கோ பாரெட் (Ko Barrett) தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் புவியின் சராசரி வெப்பநிலையானது, 1850-1900 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1.43°C அதிகமாகக் காணப்பட்டது. அத்துடன் கடல் வெப்பமும் சாதனை அளவை எட்டியுள்ளது.
பனிப்பாறைகள் தொடர்ந்து உருகுவதால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. வெப்பமடைந்து வரும் கடல்களும், உருகும் பனிக்கட்டிகளுமே இதற்கு நீண்டகாலக் காரணமாக அமைகின்றன.
2024ஆம் ஆண்டில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றின் செறிவு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டிலும் இந்த அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வாளர் ஜோன் கென்னடி (John Kennedy) சுட்டிக்காட்டினார்.
பூமியில் உள்வரும் சூரிய ஆற்றலும் வெளியேறும் கதிர்வீச்சும் சமநிலையில் இருக்க வேண்டும். ஆனால் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பதால், விண்வெளிக்கு வெளியேறும் ஆற்றல் குறைந்து பூமிக்குள் வெப்பம் தேங்கி நிற்கின்றது.
மேலதிக வெப்பத்தில் சுமார் 90 சதவீதத்தை கடல்களே உறிஞ்சுகின்றன. இதனால் கடல் மற்றும் கடலோர வளங்களை வாழ்வாதாரமாகக் கொண்ட 300 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டின் தொனிப்பொருளான "இன்று அவதானித்தல், நாளை பாதுகாத்தல்" என்பதன் கீழ், காலநிலை கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை உட்கட்டமைப்புகளில் அவசர முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஐநா பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்தார்.
2027ஆம் ஆண்டிற்குள் பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் உயிர் காக்கும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளினால் (Early Warning Systems) பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
"இன்று அவதானிப்பதன் மூலம் நாளை நாம் மக்களை, பூமியை மற்றும் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க முடியும்" என அவர் தனது உரையை நிறைவு செய்தார்.