ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்பது குறித்து தமக்குத் தெளிவான நம்பிக்கை இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று (23) ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். புதிய தலைவரிடமிருந்து தமக்கு இதுவரை எந்தவொரு செய்தியோ அல்லது பதிலோ கிடைக்கவில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
"அவர் இறந்து போவதை நான் பார்க்க விரும்பவில்லை" என்று குறிப்பிட்ட டிரம்ப், மேலும் கூறுகையில்:
"அவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்பது யாருக்கும் தெரியாது. அவருக்கு என்ன நடந்தது என்று யாராலும் சொல்ல முடியாது. எப்படியிருந்தாலும், அவர் இறந்து போவதை நான் பார்க்க விரும்பவில்லை."
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் நடத்தப்பட்ட கூட்டுத் தாக்குதல்களில் அன்றைய உச்ச தலைவர் அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
எனினும், அவர் பகிரங்கமாகத் தோன்றாத காரணத்தினால், அவரது உடல்நிலை மற்றும் உயிர் குறித்து சர்வதேச அளவில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்!
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) முன்னாள் தளபதி ஒருவர், அந்நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானிய அரச ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, முகமது பாகர் சொல்காதிர் (Mohammad Bagher Zolghadr) இந்த உயரிய பதவிக்கு பெயரிடப்பட்டுள்ளார்.
இவர் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் பிரிகேடியர் ஜெனரல் (Brigadier General) பதவி வரை உயர்வு பெற்ற ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஆவார்.
இதற்கு முன்னர் இந்தப் பதவியை வகித்த அலி லாரிஜானி (Ali Larijani) வான்வழித் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் மிக உயர்ந்த அதிகாரமிக்க அமைப்பாக இந்த உச்ச தேசிய பாதுகாப்புச் சபை கருதப்படுகிறது.