அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் நீடித்து வரும் நிலையில், இணையச் செயல்பாடுகள் மூலம் நாட்டை சீர்குலைக்க முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு 466 பேரை ஈரான் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளன.
ஈரானிய பொலிஸாரை மேற்கோள் காட்டி அரச செய்தி நிறுவனமான IRNA வெளியிட்டுள்ள தகவலின்படி:
"கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் கருத்துக்களில் குழப்பத்தை ஏற்படுத்தவும், சமூகத்தில் அச்சத்தையும் கவலையையும் உண்டாக்கவும், பாதுகாப்பற்ற தன்மையை ஊக்குவிக்கவும் மற்றும் எதிரிக்கு ஆதரவாக இணையத்தில் பிரச்சாரங்களை பரப்பவும் முயன்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்களின் இணையச் செயல்பாடுகளின் துல்லியமான தன்மை அல்லது அவர்கள் கைது செய்யப்பட்ட திகதிகள் குறித்து அந்தச் செய்தி நிறுவனம் எதனையும் குறிப்பிடவில்லை.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி, ஈரானின் உச்ச தலைவரைக் கொன்ற அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் போர் வெடித்ததில் இருந்து, ஈரான் அதிகாரிகள் இணைய சேவையை முழுமையாகத் துண்டித்துள்ளனர்.
இணைய கண்காணிப்பு அமைப்பான Netblocks, செவ்வாய்க்கிழமை 'X' தளத்தில் பதிவிடுகையில், "ஈரானின் இணைய முடக்கம் 576 மணிநேரங்களைக் கடந்து 25 வது நாளை எட்டியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக, ஈரானில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே உலகளாவிய இணைய வசதி கிடைத்துள்ளது.
ஏனையோர் VPN அல்லது Starlink மூலம் அவ்வப்போது இணையத்துடன் இணைய முயன்றாலும், ஈரானில் அது சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.
இருப்பினும், ஈரானியர்கள் தொடர்புகொள்வதற்கோ அல்லது ஒன்லைன் ஊடாகப் பொருட்களை முன்பதிவு செய்வதற்கோ உள்ளூர் இணையத்தைப் (Local Intranet) பயன்படுத்த முடியும்.