மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக நாட்டின் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள "அடுத்தடுத்த அச்சுறுத்தல்களை" கருத்திற்கொண்டு, பிலிப்பைன்ஸ் நாடு தேசிய எரிசக்தி அவசரகால நிலையை (National Energy Emergency) பிரகடனம் செய்துள்ளது.
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாரிய சீர்குலைவுகளுக்கு மத்தியில், எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Jr) விசேட நிறைவேற்று உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
ஈரானுடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் மற்றும் முக்கிய கடல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கப்பட்டமை ஆகியவை உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதுடன் தட்டுப்பாடும் நிலவுகிறது.
பிலிப்பைன்ஸ் தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 98 சதவீதத்தை வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இதனால் விநியோகத் தடைகளால் அந்த நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் போர் ஆரம்பிப்பதற்கு முன்னைய விலையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
இந்த அவசரகால நிலை பிரகடனம் ஒரு வருட காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள், உணவு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் சீரான விநியோகத்தை உறுதிப்படுத்த விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சாரதிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன, படகுச் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன மற்றும் எரிபொருளைச் சேமிப்பதற்காக அரச ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (LNG) விலை அதிகரித்துள்ளதால், தற்காலிகமாக நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை அதிகம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி செயலாளர் ஷரோன் காரின் (Sharon Garin) கருத்துப்படி, பிலிப்பைன்ஸில் இன்னும் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு மட்டுமே எஞ்சியுள்ளது.