ஈரான் மீதான இஸ்ரேலிய - அமெரிக்கத் தாக்குதல்களால் நாடு முழுவதும் 82,000-க்கும் மேற்பட்ட சிவில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கத்தின் (IRCS) தலைவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அதன் தலைவர் பிர்-ஹுசைன் கூலிவண்ட் (Pir-Hossein Koulivand) குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல்கள் ஆரம்பமானது முதல், ஈரான் முழுவதும் 82,417 சிவில் கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதில் 62,440 குடியிருப்பு வீடுகளும், 19,187 வர்த்தகக் கட்டடங்களும் அடங்கும்.
தலைநகர் தெஹ்ரானில் மாத்திரம் 25,280 வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன.
281 மருத்துவ வசதிகள் (மருந்தகங்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உட்பட), 481 பாடசாலைகள் மற்றும் 17 செம்பிறை சங்க மையங்கள் தாக்கப்பட்டன.
3 செம்பிறை சங்க உலங்குவானூர்திகள் (Helicopters), 48 செயல்பாட்டு வாகனங்கள் மற்றும் 46 அம்புலன்ஸ் வண்டிகள் அழிக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸிற்கு திங்கட்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பிய கூலிவண்ட், ஈரானின் மருத்துவக் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் இடைவிடாத தாக்குதல்கள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அவற்றை வன்மையாகக் கண்டித்தார்.
இந்தத் தாக்குதல்கள் ஜெனீவா உடன்படிக்கைகள் உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடுமாறு உலக சுகாதார நிறுவனத்தை வலியுறுத்தினார்.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தெஹ்ரானில் உள்ள 30 இலக்குகளைத் தாக்கியதன் மூலம் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் தமது இராணுவ ஆக்கிரமிப்பை ஆரம்பித்தன.
இதன்போது ஈரானின் உச்ச தலைவர் ஆயத்தொல்லா செய்யித் அலி ஹொசைனி கமேனி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதற்குப் பதிலடியாக, ஈரானிய படைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதிகள் மற்றும் பிராந்தியத்திலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தின.
ஈரான் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, போர் தொடங்கியது முதல் பல்வேறு அமெரிக்கத் தளங்களில் குறைந்தது 600 அமெரிக்கத் துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்.