ஈரானின் ஆக்ரோஷமான போக்கைக் காட்டும் ஈரானின் புதிய பாதுகாப்பு பிரதானி நியமனம்!

ஈரானின் ஆக்ரோஷமான போக்கைக் காட்டும் ஈரானின் புதிய பாதுகாப்பு பிரதானி நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புப் பிரதானியாக, உச்ச தலைவர் அயத்தொல்லா மொஜ்தபா கமேனியின் விசுவாசியான முகமது பாகர் சொல்காதிர் (Mohammad Bagher Zolghadr) நியமிக்கப்பட்டுள்ளமை, கமேனி தனது அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவதைக் காட்டுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Johns Hopkins University) பேராசிரியர் வலி நஸ்ர் (Vali Nasr), செவ்வாய்க்கிழமை இது குறித்து 'X' தளத்தில் பதிவிடுகையில்:

"சொல்காதிர் என்பவர் மொஜ்தபாவின் நம்பிக்கைக்குரிய மனிதர். இந்தத் தெரிவு மொஜ்தபா கமேனியின் அதிகாரப் பிடிக்குள் நாடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகளை காலிபாப் மறுத்துள்ளார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த நஸ்ர், "வெள்ளை மாளிகைக்கு காலிபாப் ஒரு நம்பிக்கையாகத் தெரிந்தாலும், கள யதார்த்தம் சொல்காத்திரின் வசமே உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் ஈரானின் சிரேஷ்ட தலைவர்களைப் படுகொலை செய்தமையானது (Decapitation), இறுதியில் ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) மிகவும் தீவிரவாத மற்றும் போர் குணம் கொண்ட (Hawkish) பிரிவினரிடமே அதிகாரத்தைக் கையளித்துள்ளது என பேராசிரியர் நஸ்ர் வாதிடுகிறார்.

சொல்காதிர் இந்தத் தீவிரவாதப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், அலி லாரிஜானிக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டமை அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்பதற்கான அறிகுறி அல்ல. மாறாக, இது ஈரானின் மிகவும் ஆக்ரோஷமான (Aggressive) போக்கையே காட்டுகிறது.

1999 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் ஈரானில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் சொல்காதிருக்கு முக்கிய பங்கு இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நியமனமானது, ஈரான் தனது பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் எவ்வித விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராக இல்லை என்பதையும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக மேலும் தீவிரமாகச் செயற்படும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது.