கனடாவின் சர்வதேச மாணவர் திட்டம் தோல்வி: கணாய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

கனடாவின் சர்வதேச மாணவர் திட்டம் தோல்வி: கணாய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

கனடாவின் சர்வதேச மாணவர் திட்டத்தில் (International Student Program) மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், அதன் நேர்மையை உறுதிப்படுத்துவதில் "தோல்வியடைந்துள்ளன" என்று அந்நாட்டின் கணாய்வாளர் நாயகத்தின் (Auditor General) புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கல்வி நிறுவனங்களால் அடையாளம் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான மாணவர் வழக்குகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவையே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களால் குடிவரவுத் திணைக்களத்திற்கு (IRCC) சமர்ப்பிக்கப்பட்ட 153,324 சந்தேகத்திற்குரிய மாணவர் வழக்குகளில், அரசாங்கத்தால் ஆண்டுக்கு சுமார் 2,000 வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடிந்துள்ளது.

விசாரணைகளின் போது 1,654 மாணவர்கள் எவ்வித பதிலும் வழங்கவில்லை. எவ்வாறாயினும், மேலதிக தகவல்களைக் கோருவதைத் தவிர, குறித்த மாணவர்கள் விதிமுறைகளை மீறினார்களா என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கணாய்வு அறிக்கையின்படி, போலி ஆவணங்களைப் பயன்படுத்திய அல்லது தவறான தகவல்களை வழங்கிய 800 நபர்கள் குறித்து எவ்வித தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இவர்களில் பெரும்பாலானோர் பின்னர் கனேடிய நிரந்தர குடியுரிமை (PR) அல்லது ஏனைய விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

குறிப்பாக, 800 பேரில் 105 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், 351 பேரின் விசா காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

"வெளிநாடுகளில் இல்லாத கல்வி நிறுவனங்களில் பயின்றதாகக் கூறி மோசடி செய்தவர்களுக்கும் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

2024இல் விசா காலம் முடிந்த 549,000 பேரை ஆய்வு செய்ததில், அவர்களில் 93 சதவீதமானோர் தொடர்ந்து கனடாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 39,500 பேருக்கு எவ்வித சட்டபூர்வ விசா அந்தஸ்தும் இல்லை. இவர்களில் 40 சதவீதமானோர் மட்டுமே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கணாய்வாளர் நாயகம் கரேன் ஹோகன் (Karen Hogan): "அரசாங்கத்திடம் அதிகாரமும் கருவிகளும் இருந்தும், அவர்கள் தமக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது கவலையளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

குடிவரவு அமைச்சர் லேனா மெட்லெஜ் தியாப் (Lena Metlege Diab): மோசடி மற்றும் விதிமீறல்களைத் தடுக்க கணாய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இந்த நடைமுறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சீர்திருத்தங்கள் ஒரு "மாயை" (Illusion) என்றும், இது மோசடியைத் தடுக்கப் போதுமானதாக இல்லை என்றும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி மிஷෙல் ரெம்பெல் கார்னர் விமர்சித்துள்ளார்.