அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமைதியை விரும்புகின்ற போதிலும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மிகக் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) தெரிவிக்கையில், இந்த தருணத்தில் ஈரான் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத் தவறினால், அவர்கள் இதற்கு முன் எப்போதும் கண்டிராத அளவிலான தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை ஈரான் நிராகரித்தால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று போர் நிறுத்த நிபந்தனைகளை அறிவித்தார்.
இதன்படி, அமெரிக்கா ஈரானுக்கு 15 நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்பட்டால் மட்டுமே போர் நிறுத்தத்திற்கு (Ceasefire) தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த போர் நிறுத்த முன்மொழிவுகளை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) நிராகரித்துள்ளார். அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்த ஈரான் உத்தேசிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா இடைத்தரகர்கள் மூலம் பல்வேறு செய்திகளை அனுப்பினாலும், ஈரானுக்குத் தேவைப்படுவது நிரந்தரமான ஒரு தீர்வே என அவர் கூறினார்.
இதற்காக, ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு (Compensation) வழங்குவது உட்பட 5 கோரிக்கைகளை ஈரான் அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.
"இது ஈரானியப் போரோ அல்லது அமெரிக்கப் போரோ அல்ல; இஸ்ரேலின் தேவைக்காகவே அமெரிக்கா செயற்பட்டு வருகிறது," என அமைச்சர் அராக்சி சாடியுள்ளார்.
அமெரிக்கா எதிர்பார்த்தது போல ஈரானை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என்றும், அண்டை நாடுகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு போர் முடிவுக்கு வர இன்னும் 4 முதல் 6 வாரங்கள் வரை ஆகலாம் என வெள்ளை மாளிகை மீண்டும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கு முன்னதாக போர்ச் சூழல் முடிவுக்கு வரும் என கரோலின் லெவிட் கூறினார்.
ஜனாதிபதி டிரம்பின் ஒத்திவைக்கப்பட்ட சீன விஜயம் மே மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவுதி அரேபியா, கட்டார் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் ஈரானின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்துள்ளன.
இதற்கிடையில், மத்திய கிழக்கின் மோதல் நிலைமை ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் தற்போது ஒரு மகா யுத்தத்தின் (Large-scale war) தொடக்கப் புள்ளியில் இருப்பதாகவும், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கும் இந்தப் போரை நிறுத்த இதுவே சரியான தருணம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.