ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதற்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் நாடாளுமன்றத்தின் சிவில் விவகாரங்களுக்கான குழுவின் தலைவரை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்திகளின்படி, இதற்கான சட்டமூலம் (Bill) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அது நாடாளுமன்றத்தின் சட்டப் பிரிவினால் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தத் திட்டத்தின்படி, ஹார்முஸ் நீரிணை ஊடாகப் பயணம் செய்யும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஈரான் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்" என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது ஒரு சாதாரணமான நடைமுறை என அவர் மேலும் விளக்கியுள்ளார். "ஏனைய போக்குவரத்துப் பாதைகளைப் போலவே, ஒரு நாட்டின் ஊடாகப் பொருட்கள் கொண்டு செல்லப்படும்போது அதற்காக வரிகள் செலுத்தப்படுகின்றன.
ஹார்முஸ் நீரிணையும் அத்தகையதொரு பாதையே. நாம் அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதால், கப்பல்கள் மற்றும் எண்ணெய் தாங்கிகள் (Oil Tankers) அதற்குக் கட்டணம் செலுத்துவது இயல்பானது" என அவர் கூறியுள்ளார்.
தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் முன்வைத்துள்ள ஐந்து நிபந்தனைகளில் ஒன்று, ஹார்முஸ் நீரிணை மீது தனக்குள்ள அதிகாரத்தைச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதாகும்.