தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடற்படை வீரர்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்து மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளதுடன், அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
சிங்கள மொழி பேசும் உறுப்பினர்களைக் கொண்ட ஜூரி சபையின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சஷி மஹேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை நள்ளிரவு 12.50 மணிக்கு வழங்கியுள்ளது. இது ஒரு 'அசாதாரணமான சூழல்' என மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சியமளித்த சம்பத் மனம்பேரியின் சாட்சியம் ஊடாக, பிரதிவாதிகளுக்கு எதிராகப் போதுமான சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது. இருப்பினும், அந்தச் சாட்சியங்கள் குறித்து ஜூரி சபைக்குத் தெளிவுபடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி தவறியுள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில், குறித்த தீர்ப்பு செல்லுபடியற்றதாக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கடற்படை வீரர்களான பிரசாத் சந்தன குமார, காமினி செனவிரத்ன, பிரதீப் சமிந்த மற்றும் சிவகாந்தன் விவேகானந்தன் (சரண்), பேபியன் ராய்ஸ்டன் ஆகியோருக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
பிரதிவாதிகளின் கோரிக்கைக்கு இணங்க, சிங்கள மொழி பேசும் ஜூரி சபையினரின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விளக்கமறியலில் இருந்த சம்பத் மனம்பேரி பிரதான சாட்சியாக சாட்சியமளித்தார்.
விசாரணையின் முடிவில், ஜூரி சபையின் முடிவின் அடிப்படையில் பிரதிவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். எனினும், சாட்சியங்களை ஜூரி சபையினருக்குத் தெளிவுபடுத்துவதில் மேல் நீதிமன்ற நீதிபதி தவறிழைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, சட்டமா அதிபர் இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்திருந்தார்.