அமெரிக்க டொலர் நோட்டுகளில் ட்ரம்ப்பின் கையொப்பம்: பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவருக்குக் கிடைக்கும் முதல் கௌரவம்!

அமெரிக்க டொலர் நோட்டுகளில் ட்ரம்ப்பின் கையொப்பம்: பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவருக்குக் கிடைக்கும் முதல் கௌரவம்!

அமெரிக்க டொலர் நோட்டுகளில் தனது கையொப்பத்தைப் பொறிக்கவுள்ள பதவியில் இருக்கும் முதலாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை டொனால்ட் ட்ரம்ப் பெறவுள்ளதாக அந்த நாட்டு திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட்டின் (Scott Bessent) கையொப்பத்துடன் ஜனாதிபதி ட்ரம்ப்பின் கையொப்பமும் டொலர் நோட்டுகளில் இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவின் 250 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த முன்னோடியில்லாத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

"நமது நாடு மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப்பின் வரலாற்றுச் சாதனைகளை அங்கீகரிக்க, அவரது பெயரைக் தாங்கிய அமெரிக்க டொலர் நோட்டுகளை விட சக்திவாய்ந்த வழி வேறொன்றுமில்லை" என்று பெசென்ட் கூறினார்.

பொதுவாக அமெரிக்க பணத்தாள்களில் திறைசேரி அதிகாரிகளின் கையொப்பங்களே இடம்பெறுவது வழக்கம்.

ட்ரம்ப் மற்றும் பெசென்ட் ஆகியோரின் கையொப்பங்களைக் கொண்ட முதலாவது 100 டொலர் நோட்டுகள் ஜூன் மாதம் அச்சிடப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஏனைய நோட்டுகளும் அச்சிடப்படும்.

தற்போது அச்சிடப்படும் நோட்டுகளில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலன் மற்றும் பொருளாளர் லின் மலெர்பா ஆகியோரின் கையொப்பங்கள் காணப்படுகின்றன.

1861ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பொருளாளரின் கையொப்பம் பணத்தாள்களில் இடம்பெறும் பாரம்பரியம் இருந்து வந்தது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்தத் திட்டத்தின் கீழ் அந்தப் பாரம்பரியம் முடிவுக்கு வரவுள்ளது.

கலிபோர்னியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநரும், ட்ரம்ப்பின் நீண்டகால விமர்சகருமான கவின் நியூசம் (Gavin Newsom), இந்த அறிவிப்புக்குத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் காட்டமான பதிலை வழங்கியுள்ளார்:

"இனிமேல் அமெரிக்கர்கள் மளிகைப் பொருட்கள், எரிபொருள், வாடகை மற்றும் சுகாதாரச் செலவுகளுக்காக அதிகப் பணம் செலுத்தும் போது, அதற்கு யாரைப் பழிகூற வேண்டும் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வார்கள்."

அமெரிக்காவின் 250 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ட்ரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட்ட 24 கரட் தங்கக் காசு ஒன்றை வெளியிடுவதற்கு மத்திய கலை ஆணையம் இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது.

முன்னதாக, ட்ரம்ப்பின் முதல் பதவிக்காலத்தின் போது, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு அனுப்பப்பட்ட நிதியுதவி காசோலைகளிலும் (Support cheques) அவரது பெயர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.