ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகளால் ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்த நெருக்கடி நிலை காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பதன் மூலம் உலகில் இரண்டாவது அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக BBC Verify ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இது தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு:
தினசரி 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணித்த ஹோர்முஸ் நீரிணை ஊடாக தற்போதைய போக்குவரத்து மிகக் குறைந்த அளவிற்கே பதிவாகியுள்ளதாக BBC Verify தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக, ஸ்மார்ட்போன்கள், மருந்துகள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய விவசாயத்திற்குத் தேவையான யூரியா, பொட்டாஷ், அமோனியா மற்றும் பொஸ்பேட் போன்ற உரத் தேவையில் மூன்றில் ஒரு பகுதி (1/3) பொதுவாக இந்த நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வட அரைக்கோளத்தின் முக்கிய பயிர்ச்செய்கை காலங்கள் என்பதால், தற்போதைய உரத் தட்டுப்பாடு ஆண்டின் இறுதியில் அறுவடை குறைவதற்கு நேரடியாகப் பாதிக்கும்.
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால் உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 5.2% ஆகவும் அதிகரிக்கக்கூடும் என ஜேர்மனியின் Kiel ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Kiel நிறுவனத்தின் தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் பொருட்களின் விலை உயர்வினால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஒட்டுமொத்த உணவு விலை அதிகரிப்பின் அடிப்படையில் மிக மோசமாகப் பாதிக்கப்படும் நாடுகள் வருமாறு:
நாடு உணவுவிலை அதிகரிப்பு (%)
சாம்பியா (Zambia) 30.7%
இலங்கை (Sri Lanka) 15.3%
தாய்வான் (Taiwan) 12.5%
பாகிஸ்தான் (Pakistan) 11.4%