டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக "No Kings" (அரசர்கள் தேவையில்லை) என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்றாவது தேசிய எதிர்ப்பு தினம் இன்று, 2026 மார்ச் 28 சனிக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு:
ஓராண்டிற்கும் குறைவான காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பிரமாண்ட போராட்டம், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய எதிர்ப்பு தினமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indivisible, 50501 Movement, No Kings Coalition மற்றும் AFL-CIO போன்ற பல முற்போக்கு அமைப்புகளின் ஒன்றிணைப்பில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஒரு பாரிய வன்முறையற்ற சவாலாக அவர்கள் வர்ணிக்கின்றனர்.
இந்த எதிர்ப்பு இயக்கம் 2025 ஜூன் மாதத்தில் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் வளர்ந்து வரும் ஏதேச்சதிகாரத்திற்கு எதிராகத் தொடங்கியது.
முதல் கட்டம் (2025 ஜூன் 14): 2,100க்கும் மேற்பட்ட நகரங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். ஜனாதிபதியின் முடியாட்சி போன்ற நடத்தை மற்றும் பாரிய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக இது அமைந்தது.
இரண்டாம் கட்டம் (2025 அக்டோபர் 18): 2,700 இடங்களில் சுமார் 7 மில்லியன் மக்கள் பங்கேற்றனர். நியூயோர்க், வாஷிங்டன், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் மக்கள் வெள்ளம் காணப்பட்டது.
"No Kings 3" - இன்றைய போராட்டத்திற்கான காரணங்கள்:
தற்போது நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான முக்கிய காரணங்களாகப் பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றன:
முகமூடி அணிந்த பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அச்சமூட்டும் ICE (குடிவரவு அமுலாக்க) நடவடிக்கைகள்.
ரினே குட், கீத் போர்ட்டர் ஜூனியர் மற்றும் அலெக்ஸ் ப்ரெட்டி போன்றவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்.
ஒரு மாதத்திற்கு முன்னர் ஈரானுடன் ஆரம்பமான போர்ச் சூழல்.
பேச்சு சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மீதான தாக்குதல்கள்.
சாதாரண குடும்பங்களை நசுக்கி, கோடீஸ்வரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதாரக் கொள்கைகள்.
ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் ஜேன் ஃபோண்டா போன்ற பிரபலங்கள் மினசோட்டா மாநிலத்தின் கெப்பிட்டல் கட்டிடத்திற்கு அருகில் நடைபெறும் முக்கிய கூட்டங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்க உள்ளனர்.
அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு ட்ரம்பிற்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய மக்கள் ஒன்றுகூடல் இதுவாகும். இது முந்தைய காலப்பகுதியை விட 133 சதவீத போராட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது.
இளைஞர்கள், சிறுபான்மையினர், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் எனப் பலதரப்பட்ட மக்கள் "சிம்மாசனங்களோ, கிரீடங்களோ அல்லது அரசர்களோ தேவையில்லை" என்ற முழக்கத்துடன் வீதியில் இறங்கியுள்ளனர்.