Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

யுத்தம், ஜனநாயகம் மற்றும் பிரசாரங்களுக்கு பின்னால் உள்ள உண்மை நிலை!

யுத்தம், ஜனநாயகம் மற்றும் பிரசாரங்களுக்கு பின்னால் உள்ள உண்மை நிலை!

யுத்தம் இப்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. இது மீளமுடியாத அளவிற்கு தீவிரமடையலாம் அல்லது ஏதேனும் ஒரு தலையீட்டின் மூலம் தணிக்கப்படலாம்.

எவ்வாறாயினும், இந்த யுத்தம் அவசியமான ஒன்று என்றும், ஜனநாயகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அமைதி ஆகியவற்றின் பெயரால் நியாயமானது என்றும் ஏற்றுக்கொள்ளுமாறு உலகம் கோரப்படுகிறது.

அதே நேரத்தில், எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை உலகம் முழுவதும் உள்ள சாதாரண மக்களை கடும் துயரத்திற்குள் தள்ளியுள்ளன.

வியட்நாமின் ஹாலோங் பே (Ha Long Bay) பகுதிக்கு, நியூயோர்க்கிலிருந்து வந்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர், ஒரு நபருடனான உரையாடலின் போது தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அந்தப் பெண், ஒரு மருத்துவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

உலகின் அதிசெல்வந்த நாடு என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் வாழ்க்கை குறித்து அவர் கூறிய விடயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கைச் செலவு உயர்வு, வீட்டு வசதி தட்டுப்பாடு, வறுமை, குற்றச் செயல்கள், சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் குறிப்பாக பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ள கடன் முறைமை பற்றி அவர் விவரித்தார்.

அனைத்திற்கும் மேலாக, குடிவரவு அதிகாரிகள் குறித்த பயம் அவரை உலுக்கியுள்ளது. அவர் வியட்நாமிலேயே தங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அங்கு தனக்கு அதிக பாதுகாப்பு உணர்வு கிடைப்பதாக அவர் கூறினார்.

வியக்கத்தக்க வகையில், 2024ஆம் ஆண்டளவில் நியூயோர்க் நகரம் அமெரிக்காவின் மிகவும் செல்வந்த நகரமாகவும், அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களையும் (349,500க்கும் அதிகமானோர்) மற்றும் பில்லியனர்களையும் (700க்கும் அதிகமானோர்) கொண்ட நகரமாகவும் உள்ளது.

இது உலகப் பொருளாதார மையமாகச் செயல்படுவதுடன், 3 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான தனிநபர் சொத்துக்களைக் கட்டுப்படுத்துகிறது.

உலகின் சக்திவாய்ந்த நாட்டின் உண்மை நிலை இதுவென்றால், அதே நாடு ஜனநாயகத்தின் பெயரால் ஒரு போரை முன்னெடுக்கும்போது ஒரு அடிப்படை கேள்வி எழுகிறது. இது உண்மையிலேயே சுதந்திரத்தைப் பற்றியதா, அல்லது சித்தாந்தம் மற்றும் அதிகாரத்தைப் பற்றியதா?

வியட்நாம், மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் பாணியிலான ஜனநாயகத்தைப் பின்பற்றாவிட்டாலும், பொருளாதார ரீதியாக அது சிறப்பான முடிவுகளைப் பெற்றுள்ளது.

102 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு 2025ஆம் ஆண்டில் சுமார் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 1980களில் 70 சதவீதமாக இருந்த வறுமை விகிதத்தை 2026ஆம் ஆண்டளவில் 2.9 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க அது வெற்றி பெற்றுள்ளது. இது உலகின் மிக வேகமான வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

அதே நேரத்தில், வியட்நாமின் பொருளாதாரம் உலகளாவிய கட்டமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது. 2025 இல் 186 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை (மொத்த இறக்குமதியில் 39.6%) வழங்கும் சீனாவின் மிகப்பெரிய இறக்குமதி ஆதாரமாக வியட்நாம் உள்ளது.

அதேபோன்று, 126 பில்லியன் டொலர் (மொத்த ஏற்றுமதியில் 32%) பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்கா, வியட்நாமின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வியட்நாமின் பொருளாதார வெற்றி என்பது முதலாளித்துவ அமெரிக்காவின் நுகர்வோர் கலாச்சாரம் மற்றும் கம்யூனிச சீனாவின் உற்பத்தி உள்ளீடுகள் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது.

இது ஒரு எளிய உண்மையை உறுதிப்படுத்துகிறது. உலகப் பொருளாதாரம் என்பது ஒன்றையொன்று சார்ந்து இருக்கும் (Interdependence) தன்மையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நாடும் தனித்து நின்று பொருளாதார பலத்தைப் பெற முடியாது.

எனவே, ஜனநாயகத்தின் பெயரால் போரை அங்கீகரிப்பவர்களே, இறுதி நோக்கம் தான் என்ன? அமைதியா அல்லது ஆதிக்கமா? சாதாரண மக்களுக்கு சுதந்திரமா அல்லது ஒரு சில பில்லியனர்களுக்குச் செல்வமா?

உலகிற்கு ஜனநாயகத்தின் பெயரால் மீண்டும் ஒரு போர் தேவையில்லை. அதற்குத் தேவை மனிதநேயத்தின் பெயரிலான அமைதி மட்டுமே.