ஈரான் எண்ணெயில் குறி!

ஈரான் எண்ணெயில் குறி!

ஈரானில் உள்ள "எண்ணெயைக் கைப்பற்ற" விரும்புவதாகவும், கார்க் தீவில் உள்ள ஈரானின் ஏற்றுமதி நிலையத்தை வொஷிங்டன் கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 'த ஃபைனான்சல் டைம்ஸ்' பத்திரிகையிடம், கூறியுள்ளார்.

ஜனவரியில் வெனிஸியூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகத்தை "காலவரையின்றி" கட்டுப்படுத்த வொஷிங்டன் நோக்கம் கொண்டிருந்ததை இங்கு குறிப்பிட்ட ட்ரம்ப், வெனிஸியூலா விவகாரத்தில் அமெரிக்கா கையாண்ட அணுகுமுறையை விபரித்தார்.

"உண்மையைச் சொல்லப்போனால், ஈரானில் உள்ள எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால், அமெரிக்காவில் உள்ள சில முட்டாள்கள், 'நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்கள்," என்று ட்ரம்ப் கூறினார்.

"ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம், ஒருவேளை கைப்பற்றாமலும் போகலாம். நமக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன," என்று டிரம்ப் ஃபைனான்சல் டைம்ஸிடம் கூறினார். "அதற்கு நாம் [கார்க் தீவில்] சிறிது காலம் நிலைகொள்ளவேண்டியிருக்கும்." என்றார் ட்ரம்ப் .

கார்க் தீவில் ஈரானின் பாதுகாப்பு நிலை குறித்துக் கேட்டபோது பதிலளித்த அவர், "அவர்களிடம் எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் அதை மிக எளிதாகக் கைப்பற்றிவிட முடியும் " என்று பதிலளித்தார்.