ஈரான் போர் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், குருத்தோலை ஞாயிறு (Palm Sunday) திருப்பலியின் போது, போரை நியாயப்படுத்த கடவுளை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என திருத்தந்தை 14 ஆம் லியோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய திருத்தந்தை, எந்தவொரு போர் நடவடிக்கையையும் சட்டப்பூர்வமாக்க இயேசுவை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
"சகோதர சகோதரிகளே, இதுவே நமது கடவுள்: அமைதியின் அரசரான இயேசு, போரை நிராகரிக்கிறார். அவரை வைத்து எவரும் போரை நியாயப்படுத்த முடியாது," என லியோ தெரிவித்தார்.
"யுத்தம் செய்பவர்களின் பிரார்த்தனைகளை அவர் செவிமடுப்பதில்லை, மாறாக அவற்றை நிராகரிக்கிறார்.
'நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் நான் கேட்கமாட்டேன்: உங்கள் கைகள் இரத்தத்தால் நிறைந்துள்ளன' என்று பைபிள் வசனத்தைக் குறிப்பிட்டு அவர் கூறினார்."
அமெரிக்காவில் பிறந்த முதல் திருத்தந்தையான லியோ, எந்தவொரு உலகத் தலைவர்களின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. எனினும், அண்மை வாரங்களாக ஈரான் மீது நடைபெற்று வரும் போர் குறித்த தனது விமர்சனங்களை அவர் கூர்மைப்படுத்தியுள்ளார்.
திருப்பலியின் இறுதியில் வேண்டுகோள் விடுத்த லியோ,
"கொடூரமான மோதல்களின் விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். பல சந்தர்ப்பங்களில், அவர்களால் இந்த புனித நாட்களின் சடங்குகளை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாமல் உள்ளது" என்றார்.
இந்த மோதலில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என திருத்தந்தை பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். திங்கள்கிழமை அன்று, இராணுவ வான்வழித் தாக்குதல்களை 'கண்மூடித்தனமானது' என அவர் விமர்சித்ததுடன், இத்தகைய தாக்குதல்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.
"விமானங்கள் எப்போதும் அமைதியைச் சுமந்து செல்பவையாக இருக்க வேண்டுமே தவிர, போரை அல்ல. வானத்திலிருந்து மரணமும் அழிவும் வரும் என்று எவரும் அஞ்சக் கூடாது," என ஈரான் போரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவர் தெரிவித்தார்.
பெப்ரவரி 28 அன்று ஆரம்பமான ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களைப் பாதுகாப்பதற்கு சில அமெரிக்க அதிகாரிகள் கிறிஸ்தவ மதக் கருத்துக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த புதன்கிழமை பென்டகனில் நடைபெற்ற ஒரு மத வழிபாட்டின் போது, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), "இரக்கம் காட்டத் தகுதியற்றவர்களுக்கு எதிராகக் கடுமையான வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள" பிரார்த்தனை செய்தமை குறிப்பிடத்தக்கது.