'No Kings' எனும் மகுடவாக்கியம்!

'No Kings' எனும் மகுடவாக்கியம்!

நவீன தாராளவாத ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் இருந்து உருவாகும் நிலப்பிரபுத்துவ மன்னர் மனப்பான்மையையும், தன்னிச்சையான சர்வாதிகாரத்தையும் நிராகரித்து "NO KINGS" (மன்னர்கள் வேண்டாம்) எனும் மகுடவாக்கியத்தின் கீழ் அமெரிக்காவின் பல நகரங்களில் நேற்று பிரம்மாண்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அமெரிக்காவின் புதிய குடிவரவு கொள்கைகள், பொலிஸாரின் அதிரடித் சோதனைகள் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் தன்னிச்சையான அதிகாரப் பிரயோகத்திற்கு எதிராக இந்த எதிர்ப்புப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2025 ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இடம்பெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, இது மூன்றாவது முறையாக முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டமாகும்.

'Indivisible' (பிரிபடாத ஒற்றுமை) மற்றும் '50501' ஆகிய அமைப்புகளுடன் பல சிவில் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டங்களை வழிநடத்துகின்றன.

இவை அனைத்தும் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் முன்னெடுக்கப்படும் போர் வெறி மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக உருவான அமைப்புகளாகும்.

1776ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் முடிவுக்கு வந்த நிலப்பிரபுத்துவ முடியாட்சிச் சிந்தனை, மீண்டும் ஒரு அறிகுறியாகத் தலைதூக்குவது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள முற்போக்குவாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்பின் அரசியல் கொள்கைகள் அமெரிக்காவிற்குள்ளேயே சவாலுக்குள்ளாகத் தொடங்கியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் அரசியல் தர்க்கமற்ற தன்மைகளுக்கு மத்தியில் 'ட்ரம்ப்வாதம்' (Trumpism) பின்வாங்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.