மெட்டா, கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை!

மெட்டா, கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), மெட்டா (Meta), கூகுள் (Google) மற்றும் ஆப்பிள் (Apple) உள்ளிட்ட முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப மற்றும் விண்வெளி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளதுடன், அந்த பிராந்தியத்தில் உள்ள அலுவலகங்களிலிருந்து பணியாளர்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.

இந்த சிலிகான் வேலி (Silicon Valley) நிறுவனங்கள் தற்போதைய உயர்-தொழில்நுட்ப போருக்குப் பொறுப்பானவை என்றும், ஈரானிய தலைவர்களைக் கண்டறிந்து அழிப்பதற்கு இவை உதவியுள்ளதாகவும் IRGC குற்றம் சாட்டியுள்ளது.

எனவே, இந்த நிறுவனங்கள் இனி ஈரானின் "உத்தியோகபூர்வ இலக்குகளாக" (Legitimate Targets) கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனத்தின் ஊடாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி (நாளை) உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணி முதல் இந்தப் பிராந்தியத்தில் இயங்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிறுவன வளாகங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களே பயங்கரவாத இலக்குகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஈரான் கருதுகிறது.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்: மெட்டா, கூகுள், ஆப்பிள் ஆகியவற்றுடன் போயிங் (Boeing), டெஸ்லா (Tesla) மற்றும் விண்வெளி கண்காணிப்பு நிறுவனங்கள் உட்பட 15 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈரானின் இலக்குப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில், இஸ்ரேல் மேம்பட்ட AI தளங்களைப் பயன்படுத்தி ஈரானின் உயர்மட்டத் தலைவர் உட்பட 250 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளைக் கொன்றுள்ளதாக 'தி வொஷிங்டன் போஸ்ட்' (The Washington Post) செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமேசான் (Amazon AWS) கிளவுட் உள்கட்டமைப்புகள் ட்ரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.