ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான "வெளியேறும் வழியை" (Off-ramp) தேடுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பாப்பரசர் லியோ (Pope Leo) செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிராந்திய மோதல்கள் விரிவடைந்து வரும் நிலையில், பாப்பரசரிடமிருந்து வெளிவந்த ஒரு அரிய நேரடி வேண்டுகோள் இதுவாகும்.
"ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் தான் போரை முடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது" என அமெரிக்காவிலிருந்து வந்த முதல் பாப்பரசரான லியோ தெரிவித்தார்.
"அவர் ஒரு வெளியேறும் வழியைத் தேடுவார் என்று நம்புகிறேன். வன்முறையின் அளவைக் குறைப்பதற்கான வழியை அவர் காண்பார் என எதிர்பார்க்கிறேன்" என்று ரோம் நகருக்கு அருகிலுள்ள காஸ்டெல் காண்டோல்போவில் (Castel Gandolfo) உள்ள தனது இல்லத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார்.
பொதுவாகத் தேசியத் தலைவர்களுக்கு நேரடி வேண்டுகோள்களை விடுப்பதைத் தவிர்க்கும் பாப்பரசர் லியோ, கடந்த சில வாரங்களாக ஈரான் போர் குறித்த தனது விமர்சனங்களை அதிகரித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட மிகக் கடுமையான கருத்தில், போர்களைத் தொடங்கி "இரத்தம் படிந்த கைகளைக்" கொண்டுள்ள தலைவர்களின் பிரார்த்தனைகளைக் கடவுள் நிராகரிக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.
பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதல்களுடன் ஆரம்பமான இந்த ஒரு மாத கால ஈரான் மோதல், தற்போது பிராந்தியம் முழுவதும் பரவியுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன், எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.
அப்பாவிச் சிறுவர்கள் உட்படப் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்துப் பாப்பரசர் கவலை வெளியிட்டார்.
எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக இந்த வன்முறைகள் முடிவுக்கு வரும் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
"சண்டையையும் வன்முறையையும் ஊக்குவிப்பவர்கள் பலர் உள்ளனர். நாம் அமைதிக்காகத் தொடர்ந்து வேண்டுகோள் விடுப்போம்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.