ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களை இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போர் முடிவுக்கு வருவதற்கு ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வருவது ஒரு கட்டாய நிபந்தனை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் மிக விரைவில் வெளியேறுவோம்" என்று செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறிய ட்ரம்ப், இந்த வெளியேற்றம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நிகழலாம் எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவினால் "Operation Epic Fury" (எபிக் ஃபியூரி நடவடிக்கை) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதற்கு ஈரானுடன் இராஜதந்திர உடன்படிக்கை எட்டப்படுவது அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
"ஈரான் என்னுடன் உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை," என்று கூறிய ட்ரம்ப், ஈரானைப் போரில் ஒரு நிலைக்குக் கொண்டு வந்த பின்னர், அவர்கள் உடன்படிக்கை செய்யாவிட்டாலும் அமெரிக்கா வெளியேறும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஈரான் விவகாரம் குறித்த முக்கியமான புதிய தகவல்களை வழங்குவதற்காக, ஜனாதிபதி ட்ரம்ப் புதன்கிழமை (ஏப்ரல் 01) இரவு 9:00 மணியளவில் (EST) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஈரான் தனது அணு ஆயுத முயற்சிகளைக் கைவிட வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச போர்நிறுத்தக் கட்டமைப்பை அமெரிக்கா முன்னதாக முன்வைத்திருந்தது.
உலக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz), பலப்பிரயோகம் செய்தாவது திறப்பதற்கு அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் உதவ ஐக்கிய அரபு அமீரகம் தயாராகி வருவதாக 'வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்' (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானம் ஒன்றையும் அமீரகம் கோரியுள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araqchi) கூறுகையில், அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப் (Steve Witkoff) இடமிருந்து நேரடி செய்திகளைப் பெற்று வருவதாகவும், ஆனால் அவை முறையான "பேச்சுவார்த்தைகள்" அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.